சேலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் தங்கள் உறவினர்கள் மூலம் ரேஷன் கடைகளில் கரோனா நிவாரணத் தொகை ரூ.2,000 ஆயிரம் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதியில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், 110 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, வீட்டுத் தனிமையில் 8,956 பேர் இருந்து வருகின்றனர்.
இவர்கள் அரசு வழங்கும் கரோனா நிவாரண தொகையை ரேஷன் கடைகளில் சென்று பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிவாரணத் தொகையை பெற தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் தங்கள் உறவினர்களை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும்போது சில ரேஷன் கடை ஊழியர்கள் நிவாரணத் தொகை வழங்க மறுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன் கூறும்போது, “கரோனா தொற்றால் பாதிப்படைந்து வீட்டுத் தனிமையில் உள்ளவர்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் தங்கள் உறவினர்கள் மூலம் ரேஷன் கார்டுகளை கொடுத்து அனுப்பி நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் கார்டு கொண்டு வருபவர்களிடம் நிவாரணத் தொகையை வழங்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.