கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த 18 நாட்களுக்கு பிறகு நேற்று விநாடிக்கு 127 கனஅடி நீர் வந்து கொண்டு இருந்தது.
தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்யாததாலும், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து குறைந்து இருந்ததாலும், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்துமுற்றிலும் நின்றது. இந்நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்னர்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையாலும், கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும், கெலவரப் பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதால், கிருஷ்ணகிரி அணைக்கு 18 நாட்களுக்கு பிறகு நேற்று காலை விநாடிக்கு 127 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 38.65 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 12 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தளி, தேன்கனிக்கோட்டை பகுதியில் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி தேன்கனிக் கோட்டையில் 16 மிமீ, தளியில் 20 மில்லிமீட்டர் மழை பதிவானது.
கெலவரப்பள்ளி அணை
கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நந்திமலை, பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்தது. நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 391 கனஅடியாக சரிவடைந்துள்ளது. கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடி யாகும்.
தற்போதைய அணையின் நீர் மட்டம் 38.70 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 391 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 80 கனஅடி நீர் வெளி யேற்றப்படுகிறது.