கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கரோனா நோய்தொற்று தொடர்பாக மருத்துவ ஆலோசனை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்த விவரங்கள், ஆக்சிஜன் தேவைகள் குறித்த விவரங்கள் மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறியதாவது:
கரோனா ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் செயல்படத் தொடங்கியது. இங்கு ஒரு வட்டாட்சியர் மேற்பார்வையில், ஒரு மருத்துவர், இரு மனநல நிபுணர்கள், அறக்கட்டளை சேவகர்கள் ஆகியோர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள்.
நேற்று முன் தினம் காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை கட்டுப்பாட்டு மையத்திற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து 329 போன் அழைப்புகள் வந்துள்ளது. இதில் பெரும்பாலானவை கரோனா ஆக்சிஜன் சிகிச்சை குறித்தும், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு குறித்தும், தடுப்பூசி மற்றும் கரோனா பரிசோதனை செய்து கொள்வது குறித்தும் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக வந்துள்ளன, என்றார்.