கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘டவ்தே’ புயல் மழையால் அணைகள் நிரம்பி வழியும் நிலையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து வீணாக கடலில் கலக்கும் உபரி நீர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் திறந்து விடப்பட்டது.
டவ்தே புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி மாவட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. இந்த உபரிநீரை திருநெல்வேலி மாவட்டத்தில் வறண்ட பகுதியாக இருக்கும் ராதாபுரம் பகுதி பயன்பெறும் வகையில், ராதாபுரம் கால்வாயில் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பேச்சிப்பாறை அணையிலிருந்து ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு, ஞானதிரவியம் எம்பி., உள்ளிட்டோர் ராதாபுரம் கால்வாய்க்கு நேற்று தண்ணீர் திறந்துவிட்டனர். இதன்மூலம் ராதாபுரம் தாலுகாவில் 52 குளங்களில் தண்ணீர் பெருகும் என்றும் போதிய மழைபெய்து நீர்வரத்து அதிகரித்தால் ராதாபுரம் கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராதாபுரம் பகுதி பயன்பெறும் வகை யில், கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.