சேலத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் வாகனங்களில் காய்கறிகள், மளிகை பொருட்களை விற்பனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தி யுள்ளார்.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று அதிகமுள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கை கள், தடுப்பு பணிகள் ஆகியவை தொடர்பாக மாநகர சுகாதார அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கோட்டை பல்நோக்கு அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேசியதாவது:
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக 3 பேருக்கு மேல் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தால், அப்பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உடனடியாக தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநகராட்சிப் பகுதியில் தற்போது 97 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கூடுதலாக யாரும் பாதிக்காத வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை சுகாதார அலுவலர்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அப்பகுதியில் முழுமையாக மக்கள் நடமாட்டம் தடை செய்யப்படுவதோடு, தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
தடை செய்யப்பட்ட பகுதிகளை சுற்றிலும் உள்ள தெருக்களிலும் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் அவர்களுக்குத் தேவையான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை அவர்களின் வீட்டின் அருகிலேயே சென்று விற்பனை செய்யும் வகையில் நடமாடும் விற்பனை வாகனங்களை தேவைக்கேற்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.
தடை செய்யப்பட்ட பகுதியில் வசிப்பவர்களில் தேவைப்படுவோருக்கு, தன்னார்வலர் களால் சமைக்கப்பட்ட தரமான உணவுகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பகுதியில் உள்ள மக்களுக்கும் தொற்று வராமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களையும் உரிய பாதுகாப்பு சாதனங்களை பயன்படுத்தி பாதுகாத்து கொள்ள வேண்டும்.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் குறைந்த அளவு தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்க கரோனா தற்காலிக சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது, மணியனூர் சட்டக் கல்லூரி சிகிச்சை மையத்தில் 117 பேர்களும், கோரிமேடு கல்லூரியில் 100 பேரும், தொங்கும் பூங்கா மையத்தில் 197 பேரும், மகாத்மா காந்தி விளையாட்டு அரங்கத்தில் 123 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநகராட்சிப் பகுதிகளில் 67 பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம் மூலம் 4 ஆயிரத்து 125 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், 1,501 நபர்களுக்கு சளி தடவல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 2,799 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையர்கள் சண்முக வடிவேல், சரவணன், ராம்மோகன், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.