சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
கரோனா தடுப்புப் பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை வகித்தார். ஆட்சியர் ராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கூறியதாவது:
சேலம் இரும்பாலை வளாகத் தில் 500 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முதல் பிரச்சினையாக இருப்பது ஆக்சிஜன் தேவை யாகும். கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், தனியார் மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவ மனைகளுக்கு 11 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறோம்.
அரசு வழங்கும் ஆக்சிஜனை தனியார் மருத்துவமனைகள் ஒருங்கிணைத்து பிரித்து ஒதுக்கீடுசெய்து கொள்ள சேலம் கிளை இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளோம்.
தனியார் மருத்துவமனைகளுக்கு 20 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் கேட்டுள்ளனர். எனவே, தனியார் மருத்துவமனைகளுக்கு கூடுதலாக ஆக்சிஜன் பெற்றுத்தர முதல்வர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலத்துக்கு 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வரவுள்ளன. முதல்கட்டமாக 20 செறிவூட்டிகள் வந்து சேர்ந்துள்ளன. சேலம் இரும்பாலை சிகிச்சை மையத்தில் நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கும் போது தொற்று குறைய வாய்ப்புள்ளது.
கரூரில் இரு பேருந்துகளில் ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற் படுத்தப்பட்டுள்ளது. சேலத்துக்கு ஒரு பேருந்து பயன்படுத்தப்படும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்தால், அவர்களுக்கு உரிய நிதியுதவி தருவது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், எம்எல்ஏ ராஜேந்திரன் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.