Regional02

ஊரடங்கால் மாங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை :

செய்திப்பிரிவு

வேப்பனப்பள்ளி பகுதியில் மாமரங்களுக்கு விலைக்கு வாங்கிய தண்ணீர் ஊற்றி விளைவிக்கப்பட்ட மாங்காய் களுக்கு உரிய விலை கிடைக்க வில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இழப்பினை சந்தித்து வருகின்றனர். நிகழாண்டில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மா விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. போதிய மழையின்றி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்களும் காற்றுடன் பெய்த மழைக்கு, உதிர்ந்து விழுந்து சேதமானது. தற்போது அறுவடைக்கு வந்துள்ள சில ரக மாங்காய்களுக்கு மட்டும் விலை உயர்ந்துள்ளது. பெங்களூரா வகை மாங்காய்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்கின்றனர் விவசாயிகள்.

இதுதொடர்பாக வேப்பனப் பள்ளி பகுதியைச் சேர்ந்த மா விவசாயி சையத் கூறும்போது, நாங்கள் 3 தலைமுறையாக மா விவசாயம் மட்டுமே செய்து வருகிறோம். நிகழாண்டில் 40 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்துள்ளேன். மேலும் மாமரங்கள் பூ பூத்து காய் பிடிக்கும் பருவத்தில், மழை பெய்யாததால், டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி மாமரங்களுக்கு ஊற்றினோம். மருந்து தெளிக்க அதிகளவில் செலவு ஏற்பட்டது. தண்ணீரை விலைக்கு வாங்கி மாமரங்களுக்கு ஊற்றியதால் நல்ல விளைச்சல் வந்துள்ளது. ஆனால் மாங்காய்களுக்கான விலை போதுமானதாக இல்லை. தற்போது பெங்களுரா ரகம் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

ஆனால் கடந்த ஆண்டைபோலவே நிகழாண்டி லும், டன் ரூ. 7 ஆயிரத்திற்கு மட்டுமே விலைபோவதால் விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. விலை வீழ்ச்சியால் வங்கியில் வாங்கிய கடனை, திரும்பச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஊரடங்கால் நாங்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு மா விவசாயிகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT