திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க நேற்று திரண்டிருந்தவர்கள். படம்: மு.லெட்சுமி அருண். 
Regional01

ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் நிறுத்தம் : அந்தந்த தனியார் மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு

செய்திப்பிரிவு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் நேற்றுமுதல் நிறுத்தப்பட்டது. அந்தந்த தனியார் மருத்துவமனைகளிலேயே இந்த மருந்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி முதல் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் நடைபெற்று வந்தது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தனியார்மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள் உரிய ஆவணங்களைக் காண்பித்து மருந்தைவிலை கொடுத்து பெற்றுச்சென்றனர்.

ஒரே இடத்தில் ஏராளமானோர் திரண்டு, மருந்து வாங்குவதால், கரோனா பரவல் அச்சம் மற்றும்பொதுமக்களின் சிரமங்களைதவிர்க்கும் வகையில், நோயாளிகள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைகளிலேயே மருந்தை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் நேற்றுமுதல் நிறுத்தப்பட்டது.

ஆனால், இந்த மருந்துக்காக ஏராளமானோர் நேற்று காலை 6 மணி முதல் மருத்துவமனையில் காத்திருந்தனர். மருந்து விநியோகிக்கப்படாததால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்ப நேரிட்டது.

காவல்துறை அறிவிப்பு

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி ரெம்டெசிவிர் மருந்துகள், அந்தந்த தனியார் மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் யாரும் மருந்து பெறுவதற்காக திருநெல்வேலிக்கு வர வேண்டாம். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளிலேயே ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT