முழு ஊரடங்கு நாளான நேற்று ஈரோட்டில் கரோனா நிவாரணத் தொகை பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் ரேஷன் கடைகளில் திரண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,152 ரேஷன் கடைகளில், 7 லட்சத்து 13 ஆயிரத்து 910 ரேஷன் கார்டுகளுக்கு தலா, ரூ.2,000 வீதம் கரோனா நிவாரணத் தொகை வழங்கப்படவுள்ளது. இதற்காக வீடு தோறும் டோக்கன் விநியோகிக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், பெரும்பாலான ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கனை முறையாக விநியோகிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால்,பொதுமக்கள் ரேஷன் கடைகளில் குவிந்து டோக்கனைப் பெற்றுச் சென்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும், காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் நிவாரணத் தொகையைப் பெற்றுச் சென்றனர். ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் வட்டமிடப் பட்டு, அதன்படி பொதுமக்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.
கரோனா பாதிப்பு காரணமாக, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் தனிமை காலம் முடிந்தவுடன் அந்தந்த பகுதிக்குட்பட்ட ரேஷன் கடையில் சென்று நிவாரண தொகையை வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.