சிவகங்கை அரண்மனைவாசலில் ஊரடங்கு விதிமீறல்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பதை பார்வையிட்ட எஸ்பி ராஜராஜன். 
Regional02

ஊரடங்கு விதிமீறல்களை கண்டறிய - சிவகங்கையில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு : 128 வாகனங்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி நகர் பகுதிகளில் ஊரடங்கு விதிமீறல்களை கண்டறிய ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருவதாகவும், 2 நாட்களில் விதிமீறிய 128 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட எஸ்.பி. ராஜராஜன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும், பலர் அநாவசியமாக வாகனங்களில் சுற்றி திரிகின்றனர்.

இதையடுத்து ஊரடங்கு விதியை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைக்கு அரசு உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் 2,300 போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை, காரைக்குடி நகர் பகுதிகளில், ட்ரோன் கேமரா மூலம் விதிமீறல்கள் கண்காணிக்கப்படுகின்றன. சிவகங்கை அரண்மனை வாசலில் நேற்று ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதை மாவட்ட எஸ்பி ராஜராஜன் பார்வையிட்டார்.

பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் தலைமையிலான போலீஸார் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நகர் பகுதிகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகிறோம். விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2 நாட்களில் மாவட்டத்தில் 128 வாகனங்கள் பறிமுதல் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் முகக்கவசம் அணியாத 60 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, ரூ.60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT