Regional02

தனியார் ஆம்புலன்ஸ்களில் - கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து : கிருஷ்ணகிரி ஆட்சியர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் பாதிப்புக்கு உள்ளானவர்களை மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு அழைத்து வர தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையாற்றி வருகின்றன.

இதற்கிடையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு நிலையான கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. அந்த வகையில் நோயாளிகளை எடுத்துச் செல்லும் ஊர்திக்கு முதல் 10 கிமீ வரை ரூ.1500-ம், அதற்கு மேல் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.25-ம் வசூலிக்கலாம்.

ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய பேசிக் லைப் சப்போர்ட் ஊர்திக்கு முதல் 10 கிமீ வரை ரூ.2000-ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.50-ம் வசூலிக்கலாம். மேலும், அட்வான்ஸ்டு லைப் சப்போர்ட் ஊர்திகளுக்கு முதல் 10 கிமீ வரை ரூ.4000-ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.100-ம் வசூலிக்கலாம்.

வாகன ஓட்டுநர், செவிலியர் இருவரும் தகுந்த அனுபவம் உடையவராகவும், பாதுகாப்பு கவச உடை அணிந்தும் பணிபுரிய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அனைத்து அவசரகால மருந்துகள், கருவிகளும் உடன் இருக்க வேண்டும்.

அரசின் இந்த வழிகாட்டுதலை விட கூடுதல் கட்டணம் வசூலிப்போர் தொடர்பாக 104 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். புகார் உறுதியானால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT