கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து, தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் மட்டும் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சாலையோர பூக்கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக பூக்கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் 2 நாட்களாக முழுமையாக மூடப்பட்டுள்ளதால், சில பூ வியாபாரிகள் ஏற்கெனவே கொள்முதல் செய்த பூக்களை தங்கள் வீடுகளில் வைத்து விற்பனை செய்கின்றனர். ஆனால், மக்கள் நடமாட்டம் இல்லாததால் பூ விற்பனை நடைபெறவில்லை. இதனால் பூக்கள் அனைத்தும் அழுகி சேதமடைந்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதேபோல பூக்கடைகள் செயல்படாததால் தோட்டங்களில் உள்ள பூக்களை விவசாயிகள் பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் பூக்கள் செடியிலேயே கருகி சேதமடைந்து வருகின்றன.
இது தொடர்பாக தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் செல்வராஜ் கூறியதாவது: கடந்த 2 நாட்களாக பூக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் பூக்கள் அழுகி வருகின்றன. வீட்டில் வைத்து பூக்களை விற்பனை செய்யும் முயற்சியும் பலன் தரவில்லை. வழக்கமாக தினமும் ரூ.1 லட்சம் வரை பூ வியாபாரம் செய்வோம். தற்போது அந்த வியாபாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்கள் நல்ல முகூர்த்த நாட்கள். ஆனாலும் பூ வியாபாரம் இல்லை. பேரூரணி பகுதியில் எனக்கு தோட்டம் உள்ளது.
அங்கு மல்லிகை, அரளி, கோழிக்கொண்டை, வாடாமல்லி போன்ற பூச்செடிகளை பயிரிட்டுள்ளேன். கடந்த 2 நாட்களாக பூக்களை பறிக்காததால் செடியிலேயே அவை சேதமடைந்து வருகின்றன. மளிகை, காய்கறி கடைகளை திறக்க அனுமதிப்பது போல, பூக்கடைகளையும் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றார் அவர்.
2 நாட்களாக பூக்கடைகள் திறக்கப்பட வில்லை. இதனால் பூக்கள் அழுகி வருகின்றன. வீட்டில் வைத்து பூக்களை விற் பனை செய்யும் முயற்சியும் பலன் தரவில்லை.