நீலகிரி மாவட்டத்திலுள்ள 2.16 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்குவதற்காக, ரூ.43 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 கரோனா நிவாரண நிதி வழங்கப்பபடும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் தவணையாக இம்மாதமே ரூ.2000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது.
குன்னூர் தாலுகா இளித்தொரை கிராமம் மற்றும் குன்னூர் ரயில்வே ஊழியர்கள் கூட்டுறவு பண்டக சாலையில் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று தொடங்கிவைத்தார்.
மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் 402 ரேஷன் கடைகளிலுள்ள 2 லட்சத்து 16 ஆயிரத்து 86 குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்றுமுதல் நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியது. இதற்காக ரூ.43 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பட விளக்கம்
உதகை எமரால்டு-1 ரேஷன் கடையில் கரோனா நிவாரண நிதி பெற்றுக்கொண்ட குடும்ப அட்டைதாரர்கள்.
படம்: ஆர்.டி.சிவசங்கர்.