கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு 3200 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 668 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, 16 ஆயிரத்து 562 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா பாதிப்பால், 156 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,713 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 2,818 பேர் என மொத்தம் 4,531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
தற்போது கரோனா நோய் தடுப்பு பணிகளின் தொடர்ச்சி யாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் சிகிச்சை அளிக்கும் விதமாக 3,200 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தேவை இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் கரோனா நிவாரண உதவித்தொகையை பெற்று முழு ஊரடங்கு காலத்தில் தேவையான பொருட்களை வீட்டிற்கு அருகில் உள்ள கடைகளில் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும். தேவை இல்லாமல் நீணட தூரம் வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.