Regional01

இன்று முதல் மீண்டும் மூடப்படும் காந்தி மார்க்கெட் : மேலரண் சாலையில் தற்காலிகமாக இயங்கும்

செய்திப்பிரிவு

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருச்சி காந்தி மார்க்கெட் இன்று (மே 16) இரவு முதல் மீண்டும் மூடப்படுகிறது. தற்காலிகமாக மேலரண் சாலையில் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்தாண்டு மார்ச் 30-ம் தேதி காந்தி மார்க்கெட் பூட்டப்பட்டு, பொன்மலை ஜி கார்னர் பகுதியில் காய்கறி கடைகள் செயல்பட்டு வந்தன. கரோனா பரவல் குறைந்ததால் சுமார் 8 மாதங்களுக்குப் பின் கடந்த நவ.27-ம் தேதி காந்தி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது.

இதனிடையே, கரோனா பரவல் கடந்த மாதம் அதிகரித்ததால், காந்தி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி ஜி கார்னருக்கு வியாபாரிகள் செல்லவில்லை. இதனால், காந்தி மார்க்கெட்டிலேயே தொடர்ந்து மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில், திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருவதால், காந்தி மார்க்கெட் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலையில்ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காந்தி மார்க்கெட்டில் இன்று (மே 16) இரவு முதல் வியாபாரம் நிறுத்தப்பட்டு மூடப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை மேலரண் சாலையில் வெல்லமண்டி சாலை சந்திப்பு முதல் காமராஜர் வளைவு வரையிலான சாலையின் ஒரு பகுதியில் மொத்த வியாபாரம் இரவு நேரத்திலும், மற்றொரு புறம் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சில்லறை வியாபாரமும் நடைபெறும். அதேபோல, பாலக்கரை பஜார் முதல் பாலக்கரை ரவுண்டானா வரை இங்கிலீஸ் காய்கனி வியாபாரமும் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT