தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்றன.
கடந்த 12-ம் தேதி இரவு 4.8 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது, 98.6 சதவீதம் தூய்மையானது என உறுதியும் செய்யப்பட்டது.
அடுத்த சில தினங்களுக்கு தினமும் 5 முதல் 10 டன்னும்,படிப்படியாக முழுக் கொள்ளளவான 35 டன்னும் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. திடீரென, நேற்று முன்தினம் இரவு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டது.
ஸ்டெர்லைட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி பங்கஜ் குமார் தலைமையில், தொழில்நுட்ப வல்லுநர்கள் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பழுதை சரிசெய்ய 3 முதல் 4 நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.
ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள ஆக்சிஜன் குளிர்விக்கும் கொள்கலனில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் 3 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித பணிகளும் நடைபெறாமல் மூடியே கிடந்ததால் சிறு தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பது முன்கூட்டியே கணித்ததுதான். தற்போது ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்து, ஆக்சிஜன் உற்பத்தி விரைவாக தொடங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வல்லுநர்கள் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பழுதை சரிசெய்ய 3 முதல் 4 நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.