TNadu

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட - சேலம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

சேலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆய்வாளர் மற்றும்உதவி ஆய்வாளர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, தினமும் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு அமல்படுத்திஉள்ள நிலையிலும், சேலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் கண்ணன், சேலம் போதை பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 13-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை காவல் ஆய்வாளர் கண்ணன் (46), சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தகிரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பத்குமார் (53). கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கரோனா தொற்று பரவலை தடுக்க முன்களப் பணியாளர்களாக பணியாற்றி உயிரிழந்த ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு சக போலீஸார் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT