முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய விழுப்புரம் அனிச்சம்பாளையம் மாணவி சிந்துஜாவுக்கு எம்எல்ஏ லட்சுமணன் மடிக்கணினி வழங்கினார். அருகில் ஆட்சியர் அண்ணாதுரை 
Regional02

கரோனா நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய - விழுப்புரம் மாணவிக்கு தலைமைச் செயலர் பாராட்டு : எம்எல்ஏ லட்சுமணன் மடிக்கணினி வழங்கினார்

செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே அனிச்சம் பாளையம் கிராமத்தை சேர்ந்த கணேசன் - தமிழ்செல்வி தம்பதியரின் மகள் 5- ம் வகுப்பு மாணவி சிந்துஜா. தான் படித்து வரும் பள்ளியில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு 2-வது பரிசாக ரூ.500-ஐ பெற்றார்.அந்த பணத்துடன் மடிக்கணினி வாங்குவதற்காக ஒரு உண்டியலில் சேமித்து வந்த ரூ. 1,500 பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு கடந்த 11-ம் தேதி மாணவி சிந்துஜா அனுப்பி வைத்தார்.

இதனையறிந்த தலைமைச் செயலர் இறையன்பு," சிறுவயதிலேயே பிறர் துயரங்களை உணர்ந்து, உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டி வளர்த்த பெற்றோரை பாராட்டுகிறேன். அம்மாணவி மேன்மேலும் தன் வாழ்வில் படித்து சிறந்து விளங்க இறைவனை பிராத்திக்கிறேன்" என்று பாராட்டு கடிதம் அனுப்பி உள்ளார். இதனை ஆட்சியர் அண்ணாதுரை நேற்று மாலை அம்மாணவியிடம் வழங்கினார்.

இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் சிந்துஜாவுக்கு மடிக்கணினி ஒன்றை வழங்கினார். அப்போது கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார், வட்டாட்சியர் வெங்கடசுப்பிரமணியன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT