ஈரோட்டில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படவுள்ளதாக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தனியாக ஒரு கட்டுப்பாட்டு அறை (வார் ரூம்) அமைக்கப்படும். இந்த அறையில் தலா 10 அதிகாரிகள், ஒரு மருத்துவர், ஒரு மனநல மருத்துவர், ஒரு செவிலியர் ஆகியோரைக் கொண்ட குழு மூன்று ஷிப்ட்டுகளாக 24 மணி நேரமும் செயல்படும். இதேபோல் வட்ட அளவில் ஐந்து அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும். பொதுமக்கள் இந்த கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு கரோனா பரிசோதனை, தடுப்பூசி விவரம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எங்கெங்கு படுக்கை வசதி உள்ளது என்பதுள்ளிட்ட விவரங்களை 24 மணி நேரமும் கேட்டறியலாம்.
கரோனா அறிகுறிகள் இருந்தாலும், பரிசோதனை மேற்கொள்ளாமல், நேராக மருத்துவமனையில் சேர முயற்சிக்கக்கூடாது. கரோனா உறுதியானாலும் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப மருத்துவர்கள் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும்.
ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு, அவர் சரியாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாத காரணத்தால், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தொற்று பரவுகிறது. அருகாமையில் வசிப்போருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, தொற்று பாதிப்புள்ளவர்கள் தங்களை தனிப்படுத்திக் கொள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள 60 பள்ளி, கல்லூரிகளில் தேவையான வசதி செய்து தரப் பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும். தளர்வை பயன்படுத்தி பொதுமக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
கரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை விரைவில் அதிகரிக்கப்படும். மேலும், கரோனா பரிசோதனை மேற்கொண்ட 24 மணி நேரத்தில் முடிவுகளை அறிவிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். கரோனாவிற்கு சித்த மருத்துவச் சிகிச்சை மையம் அமைக்க இரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். ரெம்டெசிவிர் மருந்து எந்த நோயாளிக்குத் தேவையாக இருந்தாலும், அந்த மருத்துவமனை மூலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தடுப்பூசிகளை அதிக அளவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை. புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கூட்டத்தில் எம்.பிக்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், ஜெயக்குமார், பண்ணாரி, பாஜக எம்.எல்.ஏ.சி.கே.சரஸ்வதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.