Regional01

தடையை மீறி சுற்றுபவர்கள் அதிகரிப்பு - சேலத்தில் முக்கிய சாலைகளை அடைத்து தீவிர கண்காணிப்பு :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், கடந்த 10-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளுடனான முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தினமும் பகல் 12 மணி வரை மட்டுமே தேநீர், மளிகை, காய்கறி கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதியம் 12 மணிக்கு மேல் வாகனங்களில் யாரும் வெளியே செல்லக் கூடாது என்றும் மருத்துவ அவசர தேவைக்காக மட்டும் வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதியம் 12 மணிக்கு மேல் வெளியே சுற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகளவு இருந்து வருகிறது.

மதியத்துக்கு மேல் வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சேலம் மாநகர காவல் துறை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சேலம் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலம், ஐந்து ரோடு, திருவள்ளுவர் சிலை, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம், ஜங்ஷன், கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள சந்திப்புகளில் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

தேவையின்றி மதியம், மாலை, இரவு நேரங்களில் சுற்றுபவர்களை போலீஸார் பிடித்து, எச்சரிக்கை செய்து அனுப்பி வருகின்றனர். பொதுமக்கள் ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT