சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து பெற வரும் 21-ம் தேதி வரை டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் 2-ம் அலை பரவல் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சை பெறுபவர்களில் பலர், தீவிர பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களில், பலருக்கு ரெம்டெசிவிர் மருந்தினை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் தினசரி ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மருந்து வாங்க வருவோர் கரோனா நோயாளியின் ஆதார், மருந்து வாங்க வருபவரின் ஆதார், மருத்துவரின் பரிந்துரைக் கடிதம், நோயாளியின் ஆர்டிபிசிஆர் அறிக்கை, சிடி ஸ்கேன் அறிக்கை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். ஒருவருக்கு 6 டோஸ் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
மருந்து வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவதால், கூட்டம் அதிகரித்துள்ளது.
மருந்து வாங்க அதிகரிக்கும் கூட்டத்தால் கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் மருந்து விற்கப்படுவதால், பலர் வரிசையில் நின்று கிடைக்காமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதை தவிர்க்க மருந்து வாங்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதன் வரிசை எண் அடிப்படையில் மருந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் கூறும்போது, “ரெம்டெசிவிர் மருந்து குறைந்த அளவே வரும் நிலையில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர். எனவே, மருந்து கேட்டு வந்தவர்களுக்கு வரிசை எண் குறிப்பிட்டு டோக்கன் வழங்கி இருக்கிறோம். தற்போது, 21-ம் தேதி வரை மருந்து பெற டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இனி, 20-ம் தேதி தான் டோக்கன் வழங்கப்படும்” என்றனர்.