சேலம் இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம் இரும்பாலை வளாகத்தில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இரும்பாலையில் ஆட்சியர் ராமன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் இரும்பாலை வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
சேலம் இரும்பாலை வளாகத்தின் பிரத்யேக கரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் ஏற்படுத்தப்படுகிறது. சிகிச்சை மையத்துக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், குடிநீர், கழிப்பறை, சாலை வசதி, நோயாளிகளின் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் பணி மற்றும் வடிகால் வசதிகள் ஆகியவை போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இம்மையத்துக்கு தேவையான ஆக்சிஜன் சேலம் இரும்பாலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும். மேலும், ஜே.எஸ்.டபுள்யு உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் உதவியுடன் சிகிச்சைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. விரைவில் மையம் பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினர்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மலர்விழி வள்ளல், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (மின் பிரிவு) மணிவாசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு) வெங்கடாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.