Regional01

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க - அரசு - தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க குழு அமைக்கலாம் : ஐஎம்ஏ தேசிய துணைத்தலைவர் அரசுக்கு கோரிக்கை

செய்திப்பிரிவு

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, தனியார் மருத்துவமனைகளையும், அரசு மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட, அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவச் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் சி.என்.ராஜா ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளிகள்தான் அதிகளவில் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். அவர்களுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகளவில் ஏற்பட்டுள்ளது. எனவே, தட்டுப்பாட்டைப் போக்கிட ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்க வேண்டியது அவசியமாகிறது.

மேலும், கரோனா நோய் ஒழிப்பில் தனியார் மருத்துவமனைகள், அரசுக்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளன. ஆனால், அவற்றை ஒருங்கிணைப்பதில் மிகப்பெரிய தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டும், நோயாளிகள் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது.

எனவே, தனியார் மருத்துவமனைகளையும், அரசு மருத்துவமனைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட, தமிழக அரசு ஒரு குழுவை அமைக்க வேண்டும்.தனியார் மருத்துவர்களுடன் இணைந்து நோய்த்தொற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுத்திட வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT