கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு காலத்தில் பெருந்துறை சிப்காட்டில் தொழிற்சாலைகள் செயல்பட தடை விதிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிப்காட் டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கத்தின் ஒருங்கிணைப் பாளர் எஸ்.சின்னசாமி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு:
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நட வடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் நோக்கத்திற்கு மாறாக, பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டுவரும் பெரும்பாலான தொழிற்சாலைகள் தொடர்ந்து முழுமையாக செயல்பட்டு வருகின்றன.பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டுவரும் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் வட மாநிலங்கள் மற்றும் இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், நமது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், சிப்காட் சுற்றுவட்டாரக் கிராமங்ளைச் சேர்ந்தவர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பல தொழிற்சாலைகளில் சட்டவிரோதமாக ஆலைக்குள்ளேயே தொழிலாளர்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
இதனால் 50 சதவீதம் பணியாளர்களை மட்டும் கொண்டு இயக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதும் நடைமுறையில் சிரமமாகும். இங்கு பணியாற்றும் பலருக்கு ஏற்கெனவே கரோனா நோய்த்தொற்று உள்ளதாகத் தெரிகிறது.இதனால், சிப்காட்டில் பணியாற்றும் பெரும்பாலான தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும், அருகாமையில் வசிக்கும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, கரோனா பரவலைத் தடுத்திடும் வகையில், பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டு வரும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், காஸ் பில்லிங் தொழிற்சாலைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைத் தவிர மற்ற தொழிற்சாலைகளை ஊரடங்கு காலத்தில் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும்.
இதனால், வேலை இழப்புக்கு ஆளாகும் தொழிலாளர்களைப் பாதுகாத்திட அனைவருக்கும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.