ஈரோடு மாநகராட்சி பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக, நேற்று முன் தினம் ஒரே நாளில் 925 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி பகுதியில், குறிப்பிட்ட வீதியில், மூன்று வீடுகளுக்கு மேல் தொற்றுக்கு ஆளானவர்கள் இருந்தால், அப் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கருங்கல்பாளையம் சேக்கிழார் வீதி, சிதம்பரம் காலனி, ஈரோடு மேற்கு பெருமாள் கோயில் வீதி, கருங்கல்பாளையம் விநாயகர் கோயில் வீதி ஆகியவை அடைக்கப்பட்டு தனிமைப் படுத்தப் பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் மற்றும் மருத்துவர்கள், சுகாதார அலுவலர்கள் அப்பகுதியில் நேற்று ஆய்வு செய்து, மருந்துகளை வழங்கினர். அதன்பின்பு வீடுகளில் உள்ளவர் களுக்கு காய்ச்சல், சளி, இருமல், மூச்சிறைப்பு ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தெரிவிக்கு மாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதி களில் மாநகராட்சி அலுவலர்கள் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர். அடுத்த சில நாட் களுக்கு இப்பகுதிகளில் வெளியாட்கள் நுழையவும், இங்கிருப் போர் வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சி பகுதியில் தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் பரவி வருகிறது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், ஈரோடு அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் செயல்படும் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அங்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் சோதனை என 5 வகையான சோதனை செய்யப்பட்டு, நோயின் தன்மை துல்லியமாக கண்டறியப்பட்டு அதற்கு தகுந்தது போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாநகர் பகுதியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர், வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நல்ல முன்னேற்றம் ஏற் பட்டுள்ளது. வீடுகளில் தனிமையில் இருப்பவர்கள் விரைவாக தொற்றில் இருந்து குணமடைந்து வருகின் றனர், என்றார்.