கரோனா நிவாரண நிதிக்கு ஒருநாள் ஊதியம் வழங்கப்படும் என அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் சண்முகராஜன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியமும், அரசு அலுவலர் ஆசிரியர் சமுதாயமும் அர்ப்பணிப்பை வழங்கி கரோனா தொற்றை நீக்கப்பாடுபடுவார்கள். இச்சூழ்நிலையில் கரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க எடுக்கப்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், தமிழக அரசு அலுவலர், ஆசிரியர்களது ஒரு நாள் ஊதி யத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க ஒப்புதல் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர், ஆசிரியர்களது ஒரு நாள் ஊதியத்தை 2021 மே மாத ஊதியத்தில் பிடித்துக் கொள்வதற்கான அரசாணை பிறப்பித்து உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.