முழு ஊரடங்கு மூலம் கரோனா தொற்று கட்டுப்படும் என தமி ழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.
தஞ்சாவூர் கல்லுக்குளத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகா தார நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேற்று ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறி யது: கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த இருவார கால முழு ஊரடங்கின்போது, பொதுமக்கள் ஊரடங்கு விதிகளைப் பின்பற்றி இந்நோயைக் கட்டுக்குள் கொண்டு வர ஒத்துழைப்புத் தர வேண்டும்.
ஏற்கெனவே கரோனா தடுப்பூசி போடும் பணி முனைப்புடன் நடைபெறுகிறது. அதேபோல, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவமனை, கரோனா சிகிச்சை மையம், இல்லத் தனிமையில் உள்ள அனைவரும் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத் தும் பணி சிறப்பாக மேற்கொள்ளப் படுகிறது. இருவார கால முழு ஊரடங்கு மூலம் நிச்சயமாக கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
மாநில அளவில் ஒப்பிடும்போது, தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது.
மாநில அளவிலும் முன்பு கரோனா தொற்று அதிகரித்தபடி இருந்தது. ஆனால், கடந்த 4 நாட்களாக இதன் அளவு குறைந்துள்ளது. இந்த நிலைமை நீடித்தால் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.
கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் திறன் மிக்கதுதான் என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதொடர் பாக மத்திய அரசும் சான்றிதழ் அளித்துள்ளது. இரு தடுப்பூசி களும் கிடைக்கும் அளவைப் பொறுத்து நிர்வாகம் செய்யப் படுகிறது. கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணை செலுத்திக் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 2-ம் தவணை செலுத்தப் படும். மாவட்டத்தில் ஆக்சிஜன் அளவு நல்ல முறையில் கையாளப்படுகிறது. ஆக்சிஜன் அளவு தணிக்கை செய்யப்பட்டு, தேவைப்படுபவர்களுக்குத் தேவையான அளவு வழங்கி, பற்றாக்குறை இல்லாத அளவுக்குப் பராமரிக்கப்படுகிறது என்றார்.
தோட்டக்கலைத் துறை இயக்கு நரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான என்.சுப்பையன், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக, கும்பகோணம் மார்க்கெட், கரோனா சிகிச்சை மையங்களில் பணீந்திர ரெட்டி ஆய்வு செய்தார்.