தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வரும் 15-ம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதியளித்தது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் திறக்க தமிழக அரசும் அனுமதி அளித்தது. ஆக்சிஜன் உற்பத்தி நிலைய செயல்பாட்டை கண்காணிக்க தூத்துக்குடி ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கண்காணிப்புக் குழுவினர் கடந்த 5-ம் தேதி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆய்வு நடத்தினர். அதன்பின்னர் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
3 ஆண்டுகளுக்கும் மேலாகஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால், ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை முழுமையாக சீரமைக்கும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.
ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வரும் 15-ம் தேதி ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என, தமிழகஅரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே,ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் நேற்று மீண்டும் கள ஆய்வு மேற்கொண்டனர். ஆக்சிஜனை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் வந்துசெல்வதற்கான பாதை குறித்தும், சீரமைப்பு பணிகள் குறித்தும் வல்லுநர் குழுவினருடன், ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.