டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதையடுத்து, திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சேலம் டவுன் ரயில் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடைக்கு வெல்டிங் வைத்து, பிரதான கதவுக்கு சீல் வைக்கப்பட்டது. படம்: எஸ். குரு பிரசாத் 
Regional01

சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு ‘சீல்’ : மூடப்பட்டுள்ள மதுக்கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு தர வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

முழு ஊரடங்கு காரணமாக, சேலம் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டதுடன், கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் 220, மது அருந்தும் பார்கள் 68 செயல்பட்டு வந்தன. கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்டத்தில் செயல்பட்டு வந்த மது அருந்தும் பார்கள் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன. டாஸ்மாக் மதுபானக் கடைகள் மட்டும் செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதையொட்டி, கடந்த 10-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதன் காரணமாக, முழு ஊரடங்கு தொடங்குவதற்கு முதல் நாளன்றே, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும், பல கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதனிடையே, கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தின்போது, சில இடங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் திருட்டு நிகழ்ந்தது. இதனால், மதுபானக் கடைகளில் உள்ள மது பாட்டில்களை பாதுகாத்து வைப்பது சிரமமான செயலாக ஆனது. இந்நிலையில் , தற்போது டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஒவ்வொன்றிலும் மது பாட்டில்கள் அதிகளவில் இருப்பில் உள்ளதால், அவற்றுக்கு பாதுகாப்பு அளித்திடும் நடவடிக்கையை, டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் உள்ள கம்பி வேலி கதவுகளை, திறக்க முடியாதபடி வெல்டிங் வைத்து மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து, தற்போது டாஸ்மாக் மதுக்கடையின் வெளிக்கதவுகள் பூட்டப்பட்டு, அவற்றுக்கு போலீஸார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள மதுபாட்டில்களை மீண்டும் கிடங்குக்கு கொண்டு வந்து, அங்கு பாதுகாப்பாக வைப்பது சாத்தியமற்றது. எனவே, ஒவ்வொரு டாஸ்மாக் மதுபானக் கடையையும் மூடி சீல் வைத்துள்ளோம். மேலும், சீல் வைக்கப்பட்ட மதுபானக் கடைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் கேட்டுள்ளோம். இது தவிர, அந்தந்த மதுபானக் கடையின் ஊழியர்கள் தினந்தோறும் மதுபானக் கடைக்கு வந்து, கடையை கண்காணித்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்’ என்றனர்.

SCROLL FOR NEXT