Regional02

மடிக்கணினி வாங்க சேர்த்து வைத்தப் பணத்தை கரோனா நிவாரண நிதியாக வழங்கிய பள்ளி மாணவி :

செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே அனிச்சம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கணேசன், தமிழ்செல்வி தம்பதியினரின் மகள் சிந்துஜா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவி சிந்துஜா, தான் படித்து வரும் பள்ளியில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் கலந்து கொண்டு 2-வது பரிசாக ரூ.500-ஐ பெற்றார். அந்த பணத்துடன் மேலும் பணம் சேர்த்து உயர்கல்வியின் தேவைக்காக மடிக்கணினி வாங்குவதற்காக ஒரு உண்டியலில் சேமித்து வந்தார்.

தற்போது கரோனா 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருவதால் நோய் பாதிப்புகள் குறித்தும், தமிழக முதல்வருக்கு பல தரப்பினரும் நிவாரணம் அளித்து வருவது குறித்தும் அன்றாடம் தொலைக்காட்சியில் சிந்துஜா பார்த்து வந்துள்ளார்.

உடனே மாணவி சிந்துஜா உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ. 1,500 பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

உடனே அவர் வங்கிக்குச் சென்று அந்த பணத்திற்கு வரைவோலை எடுத்ததையடுத்து அதனை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக நேற்று மாணவி சிந்துஜா அனுப்பி வைத்தார்.

SCROLL FOR NEXT