சேலம் மாவட்டத்தில், கரோனா தொற்று பாதிப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம், மருத்துவ வசதிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தொலைபேசி எண்கள் கொண்ட உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கரோனா நோய் தொடர்பான சந்தேகங்கள், சிகிச்சைக்கான விளக்கங்கள், சிகிச்சை தரும் மருத்துவமனைகள், கரோனா கவனிப்பு மையங்கள், தடுப்பூசி போடும் இடங்கள், காய்ச்சல் முகாம் நடத்தப்படும் இடங்கள் தொடர்பான விவரங்களை பொதுமக்கள் பெறும் பொருட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் கரோனா கட்டுப்பாட்டு அறை-உதவி மையம் இயங்கி வருகின்றது. இதில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறைகளை சேர்ந்த பணியாளர்கள் எந்நேரமும் பணியில் இருப்பர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கரோனா உதவி மையத்தை 0427-2452202, 0427-1077 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு கரோனா குறித்த ஆலோசனைகள், தகவல்களை பொதுமக்கள் பெறலாம்.
இதை தவிர சேலம் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்திலும், கரோனா வைரஸ் சிறப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உதவி மையம் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டுப்பாட்டு மையத்தில், 0427-2450022, 0427-2450498 மற்றும் 91541-55297 ஆகிய தொலைபேசி எண்ணுடன் கூடிய கரோனா உதவி மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு கரோனா வைரஸ் குறித்த சந்தேகங்கள், விவரங்கள் மற்றும் மருத்துவ உதவிகளை தெரிந்து கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார்.