Regional04

சேலத்தில் நேற்று 475 நபர்களுக்கு கரேனா தொற்று உறுதி : 70 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 3,469 நபர்கள் கண்காணிப்பு

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 475 ஆக குறைந்தது. சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமுள்ள 70 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், 3,469 நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் வரை, ஒவ்வொரு நாளும் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 600-க்கும் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 600-க்கும் கீழே குறைந்தது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக, சேலத்தில் நேற்று கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-க்கும் கீழாக குறைந்தது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 475 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதில், சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் 245 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது. நகராட்சிப் பகுதிகளில் ஆத்தூரில் 14, மேட்டூரில் 7, நரசிங்கபுரத்தில் 2 என தொற்றினால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டனர். வட்டார அளவில் வீரபாண்டியில் 22, தாரமங்கலத்தில் 21, சங்ககிரி, ஓமலூரில் தலா 19, எடப்பாடியில் 16, வாழப்பாடியில் 13, நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணத்தில் தலா 12, ஆத்தூர், சேலத்தில் தலா 10, காடையாம்பட்டி, கெங்கவல்லி, கொங்கணாபுரத்தில் தலா 8, பனமரத்துப்பட்டி, மேச்சேரியில் தலா 7, மகுடஞ்சாவடி, தலைவாசலில் தலா 5 என மாவட்டம் முழுவதும் நேற்று 475 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப் பட்டது.

இதனிடையே, மாவட்டத் தில் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதிகமுள்ள 70 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு 1,208 வீடுகளில் வசிக்கும் 3,469 நபர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, அவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறா வண்ணம்போலீஸாரும் கண் காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாநகரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றான குகை அம்பலவாண சுவாமி கோயில் வீதியில், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகள், அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, மாநகராட்சி நல அலுவலர் பார்த்திபன் உடன் இருந்தார்.

SCROLL FOR NEXT