திருச்சி பீமநகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கோபிகண்ணன்(32). வழக்கறிஞர். இவர் மே 9-ம் தேதி இரவு 7 மணியளவில் ஹீபர் சாலையில் மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.
இதுதொடர்பாக கோபிகண்ணனின் சகோதரர் சந்திரசேகர் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கோபிகண்ணனுக்கும் அதே தெருவில் குடியிருந்த ஹேமந்த்குமார் என்பவருக்கும் 2018-ல் கோயில் திருவிழா நடத்துவதில் தகராறு ஏற்பட்டு விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த விரோதத்தால் கோபிகண்ணன் உள்ளிட்ட சிலர் சேர்ந்து, அரியமங்கலம் உய்யக்கொண்டான் வாய்க்கால் மேல்கரை அருகிலுள்ள குமிழியில் வைத்து 21.01.2018 அன்று ஹேமந்த்குமாரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அரியமங்கலம் போலீஸார் வழக்குபதிவு செய்து கோபிகண்ணன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன்பின், ஹேமந்த்குமாரின் குடும்பத்தினர் கோவைக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
இதனிடையே தனது அண்ணனை கொலை செய்த கோபிகண்ணனை பழிவாங்க திட்டமிட்ட ஹேமந்த்குமாரின் தம்பி பிரிஜேஸ் பிரசாந்த் (22) தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கோபிகண்ணனை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து பிரிஜேஸ் பிரசாந்த்(22), திருவானைக்காவலைச் சேர்ந்த எம்.உதயகுமார்(21), கே.நல்லதம்பி(27), ஏ.அருண்(20), எஸ்.சித்திக்(19), கோவையைச் சேர்ந்த பி.சுரேஷ்(20) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்து, கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.