அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கையிருப்பை சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்று அரசின் கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான க.பணீந்திர ரெட்டி அறிவுறுத்தினார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுகாதாரம், வருவாய்- பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி ஆகிய துறை அலுவலர்களுடன் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் தொடர்பாக க.பணீந்திர ரெட்டி நேற்று ஆய்வு நடத்தினார்.
மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் பணீந்திரரெட்டி பேசியது: திருச்சி மாவட்டத்தில் இதுவரை 5,33,276 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,276. இதில், 25,330 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை 2,33,477 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஊரக வளர்ச்சி, சுகாதாரம், காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கரோனா பரவல் தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் கையிருப்பு குறித்து ஆய்வு செய்து, அதன் இருப்பை சுகாதாரத் துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன், மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கும் அரசு இயன்முறை சிகிச்சை கல்லூரியிலும், உறையூர் உழவர் சந்தையிலும் பணீந்திரரெட்டி நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், திருச்சி ரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் அறை, ரங்கம் யாத்ரிகர் நிவாஸ் தங்கும் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்றாளர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாம், திருவானைக் காவல் பகுதியில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை செய்யப்பட்ட பகுதி ஆகியவற்றை வருவாய் நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.