திருச்சி நகைக் கடை ஊழியரை கடத்தி, கொலை செய்து, 1.6 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மேலும் 5 பேரை நேற்று போலீஸார் கைது செய்தனர்.
திருச்சி - கரூர் புறவழிச் சாலையில் அண்ணாமலை நகரில் செயல்பட்டு வரும் ஒரு நகைக் கடையில் பணியாற்றி வந்த மார்ட்டின் ஜெயராஜ் (45) என்பவர் சென்னையில் இருந்து நகைகளை வாங்கிக் கொண்டு, வாடகை காரில் திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்தக் காரின் ஓட்டுநரான பிரசாந்த்(26) மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் சேர்ந்து மார்ட்டின் ஜெயராஜை கடத்தி கொலை செய்து, மண்ணச்சநல்லூரை அடுத்த அழகியமணவாளம் பகுதியில் புதைத்துவிட்டனர். மேலும், அவரிடம் இருந்த 1.6 கிலோ நகைகளுடன் தப்பிவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உறையூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கார் ஓட்டுநரான ரங்கத்தைச் சேர்ந்த பிரசாந்த் (26), அவரது நண்பர் கிழக்குறிச்சியைச் சேர்ந்த பிரசாந்த் (26) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய அழகியமணவாளத்தைச் சேர்ந்த செ.செல்வகுமார்(19), ஜி.பிரவின் (20), எம்.அறிவழகன்(20), எம்.அரவிந்த் (23), வி.விக்ரம்(21) ஆகிய 5 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மேலும், அழகியமணவாளம் பகுதியில் புதைக்கப்பட்ட மார்ட்டின் ஜெயராஜின் உடல், வருவாய்த் துறை அலுவலர்கள் முன்னிலையில் நேற்று தோண்டி எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்குப் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் மற்றும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கார்கள், ஆயுதங்கள் ஆகியவையும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த காவல் துறையினரை மாநகர காவல் ஆணையர் அருண் பாராட்டினார்.