திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணுகுறைகளைக் கேட்டறிந்தார்.
நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு சிகிச்சைகள், உணவுவகைகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதையும், அவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்தும் ஆ்ட்சியர் கேட்டறிந்தார். மேலும், கரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும், பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்களிடம், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்
மேலும், 7 கரோனா சிகிச்சை மையங்களில் இணையதள வசதி ஏற்பாடு செய்யப்பட்டு, அதன்மூலம் மாவட்ட ஆட்சியர் தினந்தோறும், கரோனா சிகிச்சை பெறும்நோயாளிகளிடம் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை மையங்களில் அளிக்கப்படும் மருந்துகளை நோயாளிகள் உட்கொண்டு அனைவரும் நல்ல முறையில் வீடு திரும்பவேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், மாவட்ட தேசிய தகவல் மைய மேலாளர்கள் தேவராஜன், ஆறுமுகநயினார் கலந்து கொண்டனர்.