தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 
Regional02

கரோனா சவால்களை வென்ற பின்னர் - நீட் தேர்வு ரத்து குறித்து வலியுறுத்தப்படும் : தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. தகவல்

செய்திப்பிரிவு

“கரோனா தொற்று சவால்களை எதிர்கொண்டு வென்ற பின்னர், நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து மத்திய அரசிடம் திமுக அரசு வலியுறுத்தும்” என, கனிமொழி எம்.பி., தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசி, தமிழகத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பு மருந்துகளை வழங்க வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி, ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் திருமண மண்டபங்கள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும். கரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஓரிரு நாளில் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று கரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்துவார்கள். கரோனா தொற்று சவால்களை எதிர்கொண்டு வென்ற பின்னர், நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து மத்திய அரசிடம் திமுக அரசு நிச்சயம் வலியுறுத்தும் என்றார் அவர்.

SCROLL FOR NEXT