Regional01

இருவேறு இடங்களில் கடத்த முயன்ற - 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; 5 பேர் கைது :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற 5 பேரை போலீஸார் கைது செய்து, 4 டன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

சேலம் கொண்டலாம்பட்டி நெய்க்காரப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸார் நெய்க்காரப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நெய்க்காரப்பட்டி மாரியம்மன் கோயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில் 2 பேர் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.

போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணை யில், சேலம், நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த சக்திமுருகன் (24), மாமாங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ரிஸ்வான் (26) என்பதும், அவர்கள் நாமக்கல்லில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் 1.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, சேலம் மாவட்டம் தலைவாசல் நத்தக்கரை பிரிவு ரோட்டில் தலைவாசல் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், 2.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், கடலூர் மாவட்டம் தொழுதூரில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்து தலைவாசல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது.

இதையடுத்து, ஆட்டோவில் இருந்த சித்தூரைச் சேர்ந்த சத்தியசீலன்(25), இஸ்மாயில் (30), சடையன் (50) ஆகியோரை போலீஸார் கைது செய்து, சரக்கு ஆட்டோவுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT