சேலம் இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் செவிலியர் கல்லூரிமற்றும் மாணவியர் தங்கும் விடுதி யில் கரோனா தனிமைப்படுத்தும் மையங்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு சேலம் இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் செவிலியர் கல்லூரி மற்றும் மாணவியர் தங்கும் விடுதி யில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைப்பது தொடர்பாக அங்கு ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஓமலூர் அரசு மருத்துவமனை, கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி ஆண்கள் தங்கும் விடுதி, சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா உள்ளிட்ட இடங்களில் தனிமைப்படுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, சேலம் இரும்பாலை அரசு மோகன் குமாரமங்கலம் செவிலியர் கல்லூரி மற்றும் மாணவியர் தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தும் மையம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. சேலம் உருக்காலையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி கலனில் இருந்து, மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் மூலம் இங்கு கூடுதல் மருத்துவ படுக்கை வசதிகள் ஏற்படுத்த சாத்தியம் உள்ளதா? எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.