சேலம் மாவட்டத்தில் கரோனா நிவாரண உதவித்தொகை ரூ.2000 பெற ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவித்தொகை ரூ.4,000 வழங்கவும், முதல் தவணையாக இந்த மாதம் ரூ.2,000 வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 1,571 ரேஷன் கடைகள் மூலம் 10 லட்சத்து 250 ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ஒவ்வொரு நாளும் 200 பேருக்கு ரூ.2,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சேலம் மாவட்டத்தில் ரேஷன் கார்டுதாரர் களின் வீடுகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சென்று கரோனா நிவாரண உதவித்தொகை பெறு வதற்கான டோக்கன் விநியோகம் செய்தனர். நேற்று தொடங்கிய இப்பணி வரும் 14-ம் தேதி வரை நடை பெற வுள்ளது. உதவித் தொகை ரேஷன் கடைகளில் வரும் 15-ம் தேதி வரை வழங்கப் படுகிறது.
டோக்கனில் ரேஷன் கார்டு எண், பெயர், நிவாரண உதவித்தொகை பெற வேண்டிய தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. உதவித்தொகை வாங்க ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்கள் கரோனா தொற்று விதி முறைகளை பின்பற்றி, சமூக இடைவெளி விட்டும், முகக் கவசம் அணிந்தும் வர வேண்டும் என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.