Regional02

கிருஷ்ணகிரியில் கரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள், மருத்துவர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி பேசினார்.தனியார் மருத்துவமனைகள் பொறுப்பினை உணர்ந்து - ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை மட்டும் அனுமதிக்கலாம் : கிருஷ்ணகிரி ஆட்சியர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தனியார் மருத்துவமனைகள் தங்களின் பொறுப்பினை உணர்ந்து, ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை மட்டும் அனுமதியளித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். ஆட்சியர் பேசியதாவது:

2-ம் கட்ட கரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகளின் பொறுப்பும், பங்களிப்பும் அவசியமாகிறது. தனியார் மருத்துவமனைகள் தங்களின் பொறுப்பினை உணர்ந்து, ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளை மட்டும் அனுமதியளித்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஆக்சிஜன் உபயோகத்தை கண்காணிக்க அந்தந்த மருத்துவமனைகள் தனியாக குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.

தங்கள் மருத்துவமனைகளிலிருந்து மற்ற மருத்துவமனைகளுக்கு பரிந்துரை அளிக்கும் முன் அந்த மருத்துவமனைகளின் காலி படுக்கைகள் உள்ளதை உறுதி செய்து பின்னர் பரிந்துரைக்க வேண்டும். தங்கள் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏதேனும் இருப்பின் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். மேலும், ரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு படுக்கையும், ஓசூர் சந்திரசேகரா மருத்துவமனையில் 2 படுக்கைகளும் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாட்டில் உள்ள மருந்து பொருட்கள் மற்றும் அடிப்படை தேவைகள் கிடைக்க தேவையான உதவிகள் செய்து தரப்படும். மேலும், சேலம் மாவட்டத்தில் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டத்தில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துசெல்வன், இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் பரமசிவன், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் கோவிந்தன் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT