கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, மாநில எல்லையில் உள்ள 13 சோதனைச்சாவடிகளில் போலீஸார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் நேற்று முதல் வருகிற 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மளிகை, காய்கறிகள், பூக் கடைகள் பகல் 12 மணிக்கு மூடப்பட்டன. பால், மருந்தகங்கள் திறந்திருந்தன. போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. மாநில எல்லையில் உள்ள பர்கூர் வரமலைகுண்டா, காளிகோயில், வேப்பனப்பள்ளி நேரலகிரி, ஓசூர் கக்கனூர், ஜூஜூவாடி உட்பட 13 சோதனைச்சாவடிகளில் போலீஸார் கண்காணிப்பு பணியை மேற் கொண்டனர்.
மேலும், மாவட்ட எல்லைகளான சப்பாணிப்பட்டி, மஞ்சமேடு, அத்திமரத்துப்பள்ளம், தபால்மேடு, ராயக்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் போலீஸார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வெளியே வரக் கூடாது என அறிவுரை கூறி வாகனங்களில் சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பினர்.