திருச்சி- கரூர் புறவழிச்சாலையில் அண்ணா மலை நகரில் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மார்ட்டின் ஜெயராஜ்(45) என்பவரிடம், புதிய நகைகள் வாங்கி வருவதற்காக கடை நிர்வாகத்தினர் மே 7-ம் தேதி ரூ.75 லட்சம் பணத்தை கொடுத்து சென்னைக்கு வாடகை காரில் அனுப்பி வைத்தனர். காரை ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த்(24) என்பவர் ஓட்டியுள்ளார்.
சென்னையிலிருந்து 1.6 கிலோ புதிய நகைகளை வாங்கிக் கொண்டு மார்ட்டின் ஜெயராஜ் காரில் மே 8-ம் தேதி திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 9-ம் தேதி வரை அவர் திரும்பி வராததால், அவரது செல்போனுக்கு கடை நிர்வாகத்தினர் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து கடையின் உரிமையாளர் மதன், இதுகுறித்து உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் தொழுதூரை தாண்டிய பிறகே மார்ட்டின் ஜெயராஜின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தெரியவந்த விவரம்: மார்ட்டின் ஜெயராஜ் தொழுதூர் பகுதியில் வந்தபோது அவரை ஒரு கும்பல் வழிமறித்துள்ளது. அப்போது, காரை ஓட்டி வந்த பிரசாந்த்தும், அவர்க ளுடன் சேர்ந்து மார்ட்டின் ஜெயராஜை தாக்கி, அவரிடமிருந்த 1.6 கிலோ நகைகளை பறித்துக் கொண்டதுடன், அவரை கடத்திச் சென்று, திருச்சி மாவட் டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள அழகியமணவாளம் பகுதியில் கொன்று புதைத்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்துக்கு காரை ஓட்டி வந்த பிரசாந்த் தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய கார் ஓட்டுநர் பிரசாந்த், அவரது நண்பரான திருச்சியை அடுத்த கிழக்குறிச்சியை சேர்ந்த மற்றொரு பிரசாந்த் ஆகியோரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1.6 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
மேலும், அழகியமணவாளம் பகுதி யில் கொன்று புதைக்கப்பட்ட மார்ட்டின் ஜெயராஜின் உடலை தோண்டி எடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின் றனர்.