திருச்சி மரக்கடையில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியதை கண்டித்து நேற்று முன்னாள் அமைச்சர் என்.நடராஜன் தலைமையில் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர். படம்: ஜி.ஞானவேல்முருகன் 
TNadu

திருச்சியில் எம்ஜிஆர் சிலை சேதம் : கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

திருச்சி மரக்கடை பகுதியில் 1995-ம் ஆண்டு திருச்சி மாநகர எம்ஜிஆர் மன்றம் சார்பில், மறைந்த முதல்வர் எம்ஜிஆர் முழு உருவச் சிலை நிறுவப்பட்டது.

இந்நிலையில், எம்ஜிஆர் சிலையின் கை பகுதி சேதப்படுத்தப்பட்டிருந்தது நேற்று காலை தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த அதிமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் அதிமுகவினர் அங்கு திரண்டனர். பின்னர், எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய நபர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இதுகுறித்து திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸில் வெல்லமண்டி என்.நடராஜன் புகார் அளித்தார்.

நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததை தொடர்ந்து அதிமுகவினர் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "இதுபோன்ற இழிசெயல்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் செய்வோர் மீது சட்டப்படி, தக்க நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்து உள்ளார்.

SCROLL FOR NEXT