குழந்தைகள் திருமணம் நடப்பது குறித்த தகவலை சைல்டு ஹெல்ப் லைனுக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டுமென ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ப.பிரியாதேவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 18 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். வரும் 14-ம் தேதிஅட்சய திருதியை முன்னிட்டு குழந்தைகளுக்கு திருமணம் நடத்த அதிகமான வாய்ப்புள்ளது. இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தில் இருந்தும், மாநில குழந்தைகள் உரிமை ஆணையத் தில் இருந்தும் வந்த உத்தரவின் அடிப்படையில் கண்காணிக்கப் பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் வசிக்கும் 18 வயதிற்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கவிருக்கும் தகவல்கள் தெரிந்தால் 1098 சைல்டு ஹெல்ப் லைன், சமூகநலத் துறையின் உதவி எண்ணிற்கோ (181) அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத் திற்கோ உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
மேலும், கரோனா பாதிப்பில்பெற்றோர் சிகிச்சை பெறுவார் களாயின், குழந்தைகளை பராமரிக்க ஆள் இல்லாமல் இருப்பின், தற்காலிக தங்கும் வசதி ஏற்படுத்தித் தரப்படும். கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிரந்தர தங்கும் வசதி ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குழந்தைகள் குறித்து தகவல் தெரிந்தால், 1098 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.