படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியுடை யோர் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200 வீதமும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 வீதமும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 வீதமும், பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதமும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600 வீதமும், பிளஸ் 2தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 வீதமும், பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதமும் உதவித்தொகை வழங்கப் படுகிறது.
தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியும் அல்லது இணையதளம் (https://tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in) வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உதவித்தொகை பெற முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேசியமயமாக்கப்பட்ட வங்கி யில் தொடங்கப்பட்ட கணக்குப் புத்தகம், ஆதார்கார்டு, குடும்பஅட்டை மற்றும் அனைத்து கல் விச் சான்றுகளுடன் வரும் 28-ம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.