கர்நாடக மாநிலத்தில் இருந்து அந்தியூர் வழியாக தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் காவல் நிலையம் அருகே கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 36 மூட்டை களில் ரூ.5.85 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல்செய்த போலீஸார், வாகனத்தை ஓட்டிவந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிர மணியம் என்பவரை கைது செய்தனர்.
இதேபோல், தட்டகரை வனச்சரக அலுவலகம் அருகே மேற்கொண்ட வாகனச் சோதனையின் போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்திய போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் 65 மூட்டைகளில், ரூ.5.95 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பிடிபட்டன.
வாகன ஓட்டுநர் தப்பிய நிலையில், வாகனத்தில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் பல்வந்த் ஆகிய இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். இரு வேறு சம்பவங்களில் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.