சேலத்தில் உழவர் சந்தை, காய்கறி சந்தை, வாரச் சந்தை தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள உழவர் சந்தை, வாரச்சந்தைகள் ஆகியவற்றை காற்றோட்டமும், அதிக இடவசதியும் கொண்ட பகுதிகளுக்கு மாற்ற சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் சூரமங்கலம் மண்டலத்துக்கு உட்பட்ட சூரமங்கலம் உழவர் சந்தையானது, 3 ரோடு ஜவஹர் மில் திடலுக்கும், செவ்வாய்பேட்டை பால் மார்கெட் புதிய பேருந்து நிலையத்தின் கிழக்கு பகுதிக்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, குரங்குச்சாவடி வாரச்சந்தை பெருமாள் மலை பிரதான சாலை பகுதிக்கும், சூரமங்கலம் வாரச் சந்தை சூரமங்கலம் மண்டல அலுவலகம் முதல் புதுரோடு வரையான பகுதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இட மாற்றம் செய்யப்பட்டுள்ள உழவர் சந்தை மற்றும் வாரச் சந்தைகள் இன்று (10-ம் தேதி) முதல் செயல்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதனிடையே, அம்மாப் பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட ஆனந்தா ஆற்றோரத்தில் செயல்பட்டு வரும் பாதையோரக் காய்கறி நாளங்காடிகள், நேற்று முதல் செவ்வாய்பேட்டை மெயின் ரோட்டில் உள்ள சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இடம் மாறுதல் செய்யப்பட்ட பகுதிகளில் செயல்படும் உழவர் சந்தை மற்றும் வாரச்சந்தைகளில், பொது மக்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள் கரோனா தடுப்பு விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.