Regional03

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில் - நாட்டுப்புறக் கலைஞர்கள் 1,820 பேருக்கு நிவாரண உதவி வழங்கும் பணி தொடக்கம் :

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் பாதிக்கப் பட்டுள்ள 1,820 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தஞ்சாவூர் ராம கிருஷ்ண மடம் சார்பில் நிவாரண உதவி வழங்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.

கரோனா தொற்று காரணமாக, கடந்த ஓராண்டாக எவ்வித கலைநிகழ்ச்சியும் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரிய லூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள 1,820 நலிவுற்ற கிராமியக் கலைஞர்களின் குடும்பங்களுக்கு, தஞ்சாவூர் ராம கிருஷ்ண மடம் சார்பில், ரூ.18 லட்சம் மதிப்பில் 30 விதமான மளிகைப் பொருட்களை நிவாரணமாக வழங்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, முதற்கட்டமாக தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில், அதன் தலைவர் மத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ், மத் சுவாமி ஜித்மனசானந்த மகராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிராமிய நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், நாடக மற்றும் பொம்மலாட்டக் கலைஞர்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கான நிவாரண உதவிகளை ஆட்சியர் ம.கோவிந்தராவ் வழங்கி தொடங்கி வைத்தார். முன்னதாக, கிராமிய நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் அம்மன் வேடமணிந்து நாதஸ்வரம், மேளம், பறை இசைத்து வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்து விமூர்த்தானந்த மகராஜ் கூறியபோது, “நலிவுற்ற நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உதவும் வகையில், நிவாரணம் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. தொடர்ந்து, 5 மாவட்டங்களிலும் ஒன்றியம் வாரியாக பிரித்து 33 இடங்களில் 1,820 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட உள்ளன” என்றார்.

SCROLL FOR NEXT