தூத்துக்குடியில் உள்ள 2 தனியார் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும்ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனைகளுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்படுவதை கண்காணிக்க மாவட்ட தொழில் மைய மேலாளருக்கு ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தர விட்டுள்ளார்.
ஆட்சியர் உத்தரவு விவரம்: கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அனைத்து பகுதிகளிலும் தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள அரசன் ஏர் புராடெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டம் மேல அரசடியில் உள்ள தூத்துக்குடி ஆக்சிஜன் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்களும் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வருகின்றன.
இந்த இரு நிறுவனங்களிலும் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டுமல்லாமல் அருகேயுள்ள திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
ஆனால், இந்த மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை என புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. எனவே, இந்த இரு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படுவதை கண்காணிக்க மாவட்ட தொழில் மைய மேலாளருக்கு உத்தரவிடப்படுகிறது.
இந்த இரு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு மட்டுமே விநியோகம் செய்ய வேண்டும்.
இதனை உறுதிப்படுத்த மாவட்ட தொழில் மைய மேலாளர் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்வார். அவருக்கு உதவியாக தூத்துக்குடி வட்டாட்சியர் செயல்படுவார்.
இந்த இரு நிறுவனங்களில் இருந்து விநியோகம் செய்யப் படும் ஆக்சிஜன் குறித்த அறிக்கையை தினமும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள அரசன் ஏர் புராடெக்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டம் மேல அரசடியில் உள்ள தூத்துக்குடி ஆக்சிஜன் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்களும் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வருகின்றன.